53 கிலோ மீட்டர் நடந்து சென்று தாய்க்கு மகன் கடிதம்
உலக கடித தினத்தையொட்டி 53 கிலோ மீட்டர் நடந்து சென்று தாய்க்கு மகன் கடிதம் வழங்கினார்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னபெருமாள் (வயது53). இவர் சின்ன வயது முதல் பல்வேறு உருவங்கள் அடங்கிய வகையில் தமிழில் உள்ள எழுத்துக்களை கொண்டு கடிதம் வரைவது வழக்கமாக வைத்துள்ளார். இதேபோல் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனை தனது எழுத்துக்கள் மூலம் அதிகாரிகளிடம் வழங்கி அதற்குரிய தீர்வையும் கண்டுள்ளார். இந்தநிலையில் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி உலக கடித தினத்தையொட்டி வித்தியாசமான நிகழ்வை செய்ய வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக தமிழ்த்தாய் உருவத்தில் தமிழ் எழுத்துக்கள் மூலம் கடிதத்தில் வரைந்தார். பின்னர் காரைக்குடியில் இருந்து சுமார் 53கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வாகைக்குடி கிராமத்தில் வசித்து வரும் தனது தயாரிடம் நடந்தே சென்று வழங்க வேண்டும் என எண்ணிய அவர் நேற்று முன்தினம் காலை 7.55மணிக்கு புறப்பட்டு மதியம் 3.30மணிக்கு நடந்து சென்று தனது தாயார் பானுமதியிடம் வழங்கி ஆசி பெற்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- பொதுவாக நான் சந்திக்கும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை எழுத்துக்கள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். இதுதவிர பிரதமர் முதல் முதல்-அமைச்சர் வரை பல்வேறு கடிதங்கள் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.