வாலிபர் இறந்த வழக்கில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு

வாலிபர் இறந்த வழக்கில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

Update: 2021-09-01 17:19 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஏமப்பேர் காலனி பகுதியை சேர்ந்தவர் பூங்கான் மகன் பிரபு (வயது 29). இவர் கடந்த  3.5.2019 அன்று அதே கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து பூங்கான், அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், ஏமப்பேரில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் செய்து வந்த ஏமப்பேர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோகுல்தாஸ் (52) என்பவர் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி தனது மகன் பிரபு இறந்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் கோகுல்தாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 


இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் இறுதி அறிக்கையில் கோகுல்தாஸ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏமப்பேர் காலனியை சேர்ந்த சேட்டு (51), வேலு (45) ஆகிய இருவரின் பெயரையும் வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட கோகுல்தாஸ் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6,861 அபராதமும், மின்வேலி அமைத்து மனித உயிருக்கு இறப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதம் விதித்தும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.  சேட்டு, வேலு ஆகிய இருவரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்