செஞ்சி குழந்தையை தாக்கி வீடியோ அனுப்பிய விவகாரம்: கொடூர தாயின் கள்ளக்காதலன் கைது
குழந்தையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கொடூர தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவரது மனைவி துளசி. இவர்களது 2-வது குழந்தை பிரதீப்(வயது 2). இந்த குழந்தையை துளசி இரக்கமின்றி கொடூரமாக தாக்கினார்.
இது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வடிவழகன் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துளசியை கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி பாலன் நகரை சேர்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் என்ற பிரேம்குமார் (31) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. குழந்தையை கொடூரமாக தாக்கி, அந்த வீடியோவை மணிகண்டனுக்கு துளசி அனுப்பி, இருவரும் ரசித்தது தெரியவந்தது.
கள்ளக்காதலன் கைது
இதையடுத்து, மணிகண்டனை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவர் வீட்டில் இல்லை. அந்த பகுதியில் விசாரித்தபோது, அறந்தாங்கியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்து, செஞ்சிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தந்தைக்கு ஆலோசனை
இதற்கிடையே தாயின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான அந்த குழந்தையை நேற்று விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்புக்குழு முன்பு ஆஜர்படுத்தினர்.
தாக்குதலுக்கு உள்ளானதால் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் அதற்கு தேவையான சிகிச்சைகள் குறித்தும், மேலும் குழந்தைக்கு தேவையான உதவிகள் குறித்தும் குழந்தையின் தந்தையிடம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.