தாராபுரம், காங்கேயம் பகுதியில் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டது.

தாராபுரம், காங்கேயம் பகுதியில் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டது.

Update: 2021-09-01 16:14 GMT
தாராபுரம்:
தாராபுரம், காங்கேயம் பகுதியில் பள்ளி, கல்லூரி திறக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பள்ளி, கல்லூரி திறப்பு 
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கல்லூரிகளை பொருத்தவரை முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.பள்ளிகளில் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 
இதனால்  அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. சமூக இடைவெளி யோடு வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
மாணவர்கள்
அதன்படி நேற்று பள்ளிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருந்தனர். தாராபுரம், குண்டடம், அலங்கியம், தளவாய் பட்டினம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட 45 பள்ளிகளில்  காலை முதல் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்யில் பாடம் நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவிலில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி நேற்று திறக்கப்பட்டது.  ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 மாணவர்கள் வீதம் இருந்தனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் கிருமி நாசினி, சானிடைசர் கொடுத்து முக கவசம் அணிந்து வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னர் வகுப்புகளுக்கு மாணவர் அனுமதிக்கப்பட்டனர்.  11,12-ம் வகுப்புகளில் மொத்தம் 138 மாணவர்கள் வந்தனர். இதில் 8 வகுப்புகளாக பிரித்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். அதேபோல் 9, 10 வகுப்பில் மொத்தம் 78 மாணவர்கள் வந்தனர்.  இதில் 6 வகுப்புகளாக பிரித்து படங்கள் நடத்தப்பட்டன. 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாளும், 10,12ம் வகுப்புகளுக்கு வாரம் முழுவதும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் தெரிவித்தார்.
அதே போல் தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். 
காங்கேயம்
காங்கேயம், தாராபுரம் சாலையில் உள்ள அரசு பள்ளி மற்றும் காங்கேயம், கரூர் சாலையில் உள்ள கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை காங்கேயம் நகராட்சி சார்பில்  நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
குண்டடம்
 குண்டடம் பகுதியில் காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். வகுப்பறைக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த கிருமி நாசினியை கொண்டு தங்கள் கைகளை கழுவி கொண்டனர். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ- மாணவிகள் அமர்ந்து இருந்தனர்.அவர்கள் தங்கள் நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இருப்பினும் கைகொடுத்தல், தொடுதல் தடை செய்யப்பட்டு இருந்ததால் அவர்கள் உரையாடல் மூலம் தங்கள் நட்பை பரிமாறிக் கொண்டனர்.  குண்டடம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.இதுபோன்று தாயம்பாளையம், பெல்லம்பட்டி, மானூர்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 70 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்