கூடுதல் கட்டணம் வசூலித்த 2 மினிபஸ்கள் மீது நடவடிக்கை

சிவகாசியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 2 மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கலெக்டருக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

Update: 2021-08-31 21:33 GMT
சிவகாசி,

சிவகாசியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 2 மினிபஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் கலெக்டருக்கு பரிந்துரை செய்து உள்ளார்.

2 மினி பஸ்களில் கூடுதல் கட்டணம்

சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து ரிசர்வ்லயன், திருத்தங்கல், விஸ்வநத்தம், பேராபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஒருசில மினி பஸ்களில் அரசு அனுமதியின்றி திடீரென டிக்கெட் கட்டணத்தை  உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-க்கு பதில் ரூ.10 ஆக வசூலிப்பதாக பொதுமக்களிடம் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கனுக்கு புகார் வந்தது.
அதனை தொடர்ந்து நேற்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக மினி பஸ்களில் சோதனையில் ஈடுபட்டனர். 14 மினி பஸ்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 மினிபஸ்களில் கூடுதலாக பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இந்த 2 மினி பஸ்களுக்கும் அபராதம் விதிக்க விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

கடும் நடவடிக்கை

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறுகையில், மினி பஸ்களில் அரசு அனுமதியின்றி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக்கூடாது, தற்போது 2 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். விதிமீறல்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின் போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்