மகனால் தாக்கப்பட்ட பெண் சாவு

களியக்காவிளை அருகே மகனால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-08-31 21:25 GMT
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே மகனால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய் மீது தாக்குதல் 
களியக்காவிளை அருகே நாரகம்விளாகம் தாழேபுத்தன்வீட்டை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி மேரி ஷைலா (வயது 44). இவர்களது மகன் ஷைஜு (19). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தாயார் மேரி ஷைலா கண்டித்தார். 
 இந்தநிலையில்  கடந்த 26-ந் தேதி இரவு மேரி ஷைலா மகனிடம் வேலைக்கு செல்ல வலியுறுத்தினார். இதனால் மகன் ஷைஜு தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஆத்திரமடைந்த அவர் கல்லால் தாயை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மேரி ஷைலா மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் ஷைஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
கொலை வழக்காக மாற்றம்
இதற்கிடையே ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேரி ஷைலா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து சிறையில் உள்ள ஷைஜு மீது களியக்காவிளை ேபாலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்