கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் அரசு தனிமை கட்டாயம் - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தாலும் ஒரு வாரம் அரசு தனிமை கட்டாயம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2021-08-31 21:14 GMT
பெங்களூரு:

  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பரிசோதனை செய்யப்படும்

  கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் வைக்கப்படுவார்கள். அவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்று நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வந்தாலும் சரி, 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் சரி, இந்த விதிமுறை பொருந்தும். விமானம் மூலம் கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் விரும்பும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

  6-வது நாளில் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மாநில எல்லையில் உள்ள தட்சிண கன்னடா, உடுப்பி, சாம்ராஜ்நகரில் கொரோனா பரவலை தடுக்க மேலும் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து அரசு செயல் திட்டத்தை வகுத்து வருகிறது.

கல்வி முக்கியமானது

  அந்த எல்லை மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க மேலும் சில கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறைந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சியில் கல்வி மிக முக்கியமானது. குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை உறுதி செய்வது அரசின் கடமை.

  பள்ளிகளை திறக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கு வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளன. ஒருவேளை தாலுகாக்களில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்தை தாண்டினால், அந்த பகுதிகளில் பள்ளிகள் மூடப்படும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உடன் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

அனுமதிக்கக்கூடாது

  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை பொது இடங்களில் அனுமதிக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடினால், அங்கு கொரோனா பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்