ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாள்

தாதம்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வரதராஜ பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2021-08-31 20:54 GMT
தா.பழூர்:

நெல் தானம்
வைகானுச ஆகம விதிப்படி நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா பல்வேறு கோவில்களில் நடைபெற்றது. இந்நிலையில் பாஞ்சராத்ர ஆகமவிதிப்படி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணர் மற்றும் உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு கிருஷ்ணராக பாவித்து ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் வலம்புரிச்சங்கில் கிருஷ்ணனுக்கு பால் நிவேதனம் செய்யப்பட்டு சங்கில் வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அது போலவே இந்த ஆண்டும் வலம்புரி சங்கில் பால் நிவேதனம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. வீடுகளில் குழந்தை பிறந்தால் நெல் தானம் செய்வது மரபு. அந்த அடிப்படையில் கிருஷ்ணன் பிறந்ததை குறிக்கும் வகையில், கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டது. இந்த நெல்மணிகளை அவர்களுடைய நெற்களஞ்சியங்களில் சேகரிப்பதன் மூலம் பக்தர்களுக்கு குறைவில்லாமல் உணவு தானியங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இன்று உறியடி திருவிழா
பல்வேறு பழங்கள் மற்றும் கிருஷ்ணருக்கு பிடித்தமான பட்சணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிவேதனங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டனர். இன்று(புதன்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு உறியடி திருவிழா நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்