ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளர்கள்
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் விடுபட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதால் அதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
13,83,687 வாக்காளர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளான 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 152 பேரும் ஆக மொத்தம் 13 லட்சத்து 83 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியல்கள், தொடர்புடைய 13 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கியுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், வாக்காளர் பட்டியல்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி சுகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.