கூடலூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்; விவசாயிகள் புகார்

கூடலூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக நகராட்சி ஆணையாளரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-31 17:20 GMT
கூடலூர்:
கூடலூர் வாழை விவசாயிகள் ஆர்வலர் குழு சார்பில் அந்த குழுவின் செயலாளர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று நகராட்சி ஆணையாளர் சேகரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கம்பம் மச்சக்கல் புலத்தில் இருந்து கழுதைமேடு புலம் வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வண்டிப்பாதை இருந்தது. இந்த பாதையை சிலர் ஆக்கிரமித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பாதையில் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. 
ஆனால் பெருமாள் கோவில் புலத்தில் இருந்து கழுதைமேடு புலம் வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். 
இதற்கிடையே ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் கூடலூர் நகராட்சி மூலம் ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அங்கு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த பாதையில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றியபின், தார்சாலை பணியை மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்