விவசாய பணிகளை தடுப்பதாக வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாய பணிகளை தடுப்பதாக வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனியில் உள்ள மேகமலை வன உயிரின காப்பாளர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் வருசநாடு, மேகமலை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று வந்தனர். வருசநாடு, மேகமலை வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சிப்பதை கண்டித்தும், அப்பகுதிகளில் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மேகமலை வன உயிரின காப்பாளர் ஆனந்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர், கோத்தலூத்து, மஞ்சனூத்து, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வன நிலங்களில் விவசாயிகள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வன நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது என்று கூறி விவசாய பணிகளை தடுத்து வருகின்றனர். எனவே விவசாய பணிகளை வனத்துறையினர் தடுக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.