விசாரணைக்கு பயந்து ஊழியர் தற்கொலை முயற்சி
விசாரணைக்கு பயந்து ஊழியர் தற்கொலை முயற்சி
கோவை
கோவை வெறைட்டிஹால் ரோடு தெலுங்கு வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது51). நகை பட்டறை உரிமையாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னிடம் வேலை பார்க்கும் ஸ்ரீதரன் என்ற சந்துருவிடம் ஒரு கிலோ எடையுடைய 35 தங்க சங்கிலிகளை கல்பதிப்பது, டிசைன் போன்ற கூடுதல் வேலைப்பாடுகளை செய்வதற்காக கொடுத்து அனுப்பினார்.
மறுநாள் ஸ்ரீதரன் வேலைக்கு வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதரன், நகைகளை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது விபத்தில் சிக்கியதாகவும், அப்போது நகைகள் மாயமாகிவிட்டன என்றும் கூறியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ், இதுகுறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார், ஸ்ரீதரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்துபோன அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஸ்ரீதரன் விபத்து நாடகம் நடத்தி மோசடி செய்தாரா? அல்லது உண்மையிலேயே தொலைந்து போனதா? என்பது குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.