பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ரூ.200 கோடிக்கு சட்டவிரோதமாக மண் அள்ளிய கும்பல் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சுமார் ரூ.200 கோடிக்கு மர்மகும்பல் சட்டவிரோதமாக மண் அள்ளியதாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2021-08-31 16:10 GMT
திண்டுக்கல்:
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கண்வலி விதை விவசாயிகள் சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்பட 8 அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். இதையடுத்து நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளிடம், மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகாக்களில் உள்ள நல்லதங்காள் ஓடையில் பல இடங்களில் 20 அடி முதல் 45 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் சத்திரப்பட்டி குளம், கொத்தையம் நல்லதங்காள் அணை உள்ளிட்ட சில குளங்களிலும் மண் அள்ளப்பட்டு உள்ளது.
சுமார் ரூ.200 கோடி அளவில் ஒரு கும்பல் மண் அள்ளி உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கும்பல், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்