கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காததை கண்டித்து அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம்

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-31 09:19 GMT
இந்த நிலையில், இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளிலும், சாலைகளிலும் மழைநீருடன் கலந்து ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து நேற்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அலுவலகம் முன்பு பெண்கள் உள்பட குடியிருப்புவாசிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரியிடம் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காததை கண்டித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உதவி பொறியாளர் பூங்கொடி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்