வாழப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 8 பேருக்கு அபராதம்
வாழப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவல்
வாழப்பாடி அருகே கோதுமலை வனப்பகுதியில் மர்ம கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வன பாதுகாவலர் முருகன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள இரட்டைப்பாலி என்ற இடத்தில் ஒரு கும்பல் சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருந்தது. வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது. உடனே சுதாரித்துக்கொண்ட வனத்துறையினர் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். மொத்தம் 8 பேர் பிடிபட்டனர்.
அபராதம்
பின்னர் அவர்களை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அருநூற்றுமலை பெலாப்பாடி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம், கந்தசாமி, பெரியசாமி, பழனிசாமி, சிவன், ராமச்சந்திரன், மூர்த்தி, கந்தசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் அவர்கள் 8 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் வனப்பகுதியில் சந்தனமரங்களை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.