மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.

Update: 2021-08-30 21:02 GMT
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. 
அந்தியூர்
தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 
அந்தியூர் தேர் வீதியில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான பேட்டை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்து சாமியை வழிபட்டு சென்றனர். 
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ராஜாங்குளத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து பாமா, ருக்மணியுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து சாமிகளை தேரில் அமர வைத்து கெட்டிசமுத்திரம் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். கோவிலை சென்றடைந்ததும் தேர் 3 முறை வலம் வந்தது. பின்னர் கோவில் முன்பு சாமிகள் வந்த தேர் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரில் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள லட்சுமி நாராயணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 
இதேபோல் ஊஞ்சலூர் அருகே வடக்கு புதுப்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், கொளாநல்லியில் உள்ள பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கொந்தளம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
நம்பியூர்
நம்பியூர் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.  இதையொட்டி கிருஷ்ணர் உருவ சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததுடன், கோமாதா பூஜையும் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டு அகத்திக்கீரை, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 
இதில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
கோபி
கோபியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோசாலையில் நடைபெற்ற பூஜையில் பசு மாடுகளுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு கிருஷ்ணன் அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்