பெண்ணை கொன்று கணவர் தற்கொலை

விஜயாப்புரா அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கொலை செய்துவிட்டு, கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-08-30 20:56 GMT
பெங்களூரு:

பெண் கொலை

  விஜயாப்புரா (மாவட்டம்) புறநகர் தேரவி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 33). இவரது மனைவி ஸ்ரீதேவி (28). தம்பதி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக சந்தோஷ் மற்றும் ஸ்ரீதேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சந்தோசும் மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

  அதுபோல், நேற்று காலையிலும் சந்தோசுக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஸ்ரீதேவை சந்தோஷ் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் கிடந்த தலையணையை எடுத்து ஸ்ரீதேவியின் முகத்தில் அமுக்கி சந்தோஷ் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கணவர் தற்கொலை

  பின்னர் சந்தோசும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தோஷ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், விஜயாப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சந்தோஷ் மற்றும் ஸ்ரீதேவியின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

  அதே நேரத்தில் ஸ்ரீதேவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொலை செய்துவிட்டு சந்தோசும் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்