திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரியில் பழுது ஏற்பட்டு நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-08-30 20:36 GMT
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரியில் பழுது ஏற்பட்டு நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. இதன்காரணமாக இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் செல்லும் கனரக வாகனங்கள் இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுதாகி நிற்பதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. 
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு இரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 3 மணி அளவில் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென லாரி பழுதாகி நின்றது. இதனால் வாகனங்கள் ரோட்டின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. அதுமட்டுமின்றி பண்ணாரி சோதனை சாவடியிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிரேன் மூலம் காலை 8 மணி அளவில் பழுதாகி நின்ற லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 
இதையடுத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன. 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பஸ்சில் வந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.   

மேலும் செய்திகள்