கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-08-30 20:13 GMT
நெல்லை:
நெல்லையில் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் பெருமாள், கிருஷ்ணர் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில் கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இஸ்கான் கோவில்

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
மாலையில் மகா சிறப்பு ஆரத்தியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் காலையில் சங்காபிஷேகம், கலசாபிஷேகம், பால் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான பலகாரங்களும் கிருஷ்ணருக்கு படைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெண்ணெய் பூசப்பட்டது. பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உறியடி விழா நடந்தது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.

சந்தான கோபால கிருஷ்ண சுவாமி

நெல்லை டவுன் அப்பர் தெருவில் உள்ள சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பஜனையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 8-ந் தேதி ருக்மணி கல்யாணம் வைபவமும், 9-ந் தேதி ஆஞ்சநேய உற்சவமும் நடைபெறுகிறது.
முக்கூடல் நாராயணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து கோலாட்டம் அடித்தனர். முக்கூடல் சேவா பாரதி குழுவினருடன், வேடமணிந்த அனைவரும் முக்கூடல் நகரை வலம் வந்தனர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் அலங்காரமாக வேடமணிந்து கொண்டு 4 வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் உறியடி நிழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்