சங்கராபுரம் அருகே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
சங்கராபுரம் அருகே சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது
சங்கராபுரம்
ஆந்திராவில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சங்கராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேலூரைச் சேர்ந்த தணிகைவேல் (வயது 50) என்பவர் லாரியை ஒட்டினார். நேற்று அதி காலை 5.30 மணி சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டை மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 500 சிமெண்டு மூட்டைகளும் கீழே விழுந்தன.
இந்த விபத்தில் லாரி டிரைவர் தணிகைவேல் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, இப்பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. தடுப்பு கட்டை பகுதியில் உள்ள பிரதிபலிப்பான்கள் சரியாக தெரிவதில்லை. வேறு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை. எனவே விபத்தை தடுக்க இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறினர். சிமெண்டு மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் குளத்தூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.