கோவை
கோவையில் கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையாக கொண்டாடப் பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ணர் அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக கோவையில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையாக நடந்தது.
இந்த நாளில் கிருஷ்ணர் குழந்தையாக தங்களது வீடுகளுக்கு வருவது போன்று கால்தடங்களை பக்தர்கள் வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை வரைந்தனர். மேலும் தங்களது வீட்டில் உள்ள கிருஷ்ணர்-ராதை சிலைகளை பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை கள், தீபாராதனைகள் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்
கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
மேலும் கிருஷ்ணர்-ராதை சிலைகளும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்பட்டன.
இதுதவிர சிறுவர்களை உற்சாகமூட்டும் வகையில் ஓவியம், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, கிருஷ்ணர் குறித்த வினாடி வினா போட்டிகள், கட்டுரை போட்டிகள் போன்றவை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
ஆன்மிக சொற்பொழிவு
மேலும் பக்தி வினோத சுவாமி மகராஜ் மற்றும் பக்தர்களின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. அத்துடன் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து இருந்தனர். மேலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அங்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க நிறுவனர் ஸ்ரீலபிரபு பாதாவின், 125-வது ஆண்டு பிறந்தநாள் விழாவான, வியாச பூஜை செவ்வாய்க்கிழமை நடக்கிறது என்று விழா ஒருங்கிணைப்பாளர் மது கோபால் தாஸ் கூறினார்.