கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ 6 கோடியில் திட்டம்
கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ 6 கோடியில் திட்டம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். கடல்மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ள கல்வராயன்மலையில் கவியம், மேகம், பெரியார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளும், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யும் வகையில் வெள்ளிமலை, கரியாலூர் செல்லும் சாலையில் படகு குழாமும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாதலங்களுக்கு அடுத்தபடியாக கல்வராயன்மலைக்குத்தான் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதிலும் சென்னை, கடலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு 3-க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் இருந்தாலும் வரும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சியில் மட்டுமே குளித்து செல்கின்றனர். ஆனால் போதிய சாலை வசதி இல்லாததால் இதர நீர் வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே கவியம், மேகம், சிறுகலூர் ஆகிய நீழ் வீழ்ச்சிகளுக்கு சென்று வர போதிய சாலை வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குறத்திகுன்றம் கிராமத்தில் இருந்து மேகம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கவும், அதேபோல் கவியம் கிராமத்தில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல 2 கிலோமீட்டர் தூரத்துக்கும், சிறுகலூர் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிமெண்டு சாலை வசதியுடன் குளிக்கும் வசதி, உடை மாற்றும் அறைகள் கட்டவும் சுமார் ரூ.6 கோடியில் திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் சுற்றுலாத்துறை ஒப்புதல் அளித்தவுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்ல சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுற்றுலாத்துறையின் ஒப்புதலை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கல்வராயன் மலைவாசிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.