காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை: இளம்பெண் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்

காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-30 16:54 GMT
தர்மபுரி,

காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

தர்மபுரி மாவட்டம் ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவருடைய மகள் ஞானமொழி (வயது 29). பி.டெக். பட்டதாரி. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. 

இந்த நிலையில் நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவருடைய
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் ஞானமொழியின் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சர்மிளா பானு மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

காதல் விவகாரம்

அப்போது காதல் விவகாரத்தால் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஞானமொழியும், குட்டூர் பகுதியைச் சேர்ந்த அவருடைய உறவினர் மகன் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள உறவினர் மகனும், அவருடைய குடும்பத்தினரும் முடிவு செய்துவிட்டனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக கருதி மனமுடைந்த ஞானமொழி குட்டூரில் உள்ள தனது காதலர் வீட்டு முன்பு சென்று விஷம் குடித்து மயங்கி விழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு வந்த நிலையில் மருத்துவமனையில் இறந்து விட்டார். அவருடைய தற்கொலைக்கு காரணமான காதலர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்வரை ஞானமொழியின் உடலை வாங்க மாட்டோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஞானமொழியின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

இந்த போராட்டத்தால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஞானமொழி தற்கொலை தொடர்பாக குட்டூரை சேர்ந்த வாலிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக குட்டூரை சேர்ந்த தங்கவேல், இவருடைய மனைவி ராதா, மகன் முரளிதரன் ஆகிய 3 பேர் மீது அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் தங்கவேலை நேற்று போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்