ஆட்டோவை திருடிய வாலிபர் கைது
வேதாரண்யத்தில் ஆட்டோவை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் துவாக்குடியில் சிக்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் ஆட்டோவை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் துவாக்குடியில் சிக்கினார்.
ஆட்டோ திருட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் ெரயிலடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது34). இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆட்டோவை வேதாரண்யம் சன்னதி தெருவை சேர்ந்த மயில்வாகனம் (37) என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் சம்பவத்தன்று ஆட்டோவை கீழவீதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர், திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.
இதுகுறித்து அவர், வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ஆட்டோ உரிமையாளர் கார்த்திக்குக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
முகநூலில் தகவல்
கார்த்திக் தனது ஆட்டோ திருட்டு போனதை முகநூல் மூலம் அனைத்து நண்பர்களுக்கும், ஆட்டோ சங்கத்திற்கும் தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்த திருச்சி துவாக்குடி ஆட்டோ நண்பர்கள் துவாக்குடி பஸ் நிலைய பகுதியில் சந்தேகம்படும் வகையில் ஒரு ஆட்டோ நிற்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வாலிபர் கைது
இதை தொடர்ந்து துவாக்குடி போலீசார், அந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆட்டோவில் இருந்த நபரையும் பிடித்து வைத்திருந்தனர். வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் துவாக்குடிக்கு சென்று ஆட்டோவையும், பிடிபட்ட நபரையும் வேதாரண்யத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருக்குவளை பாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகையன் மகன் மணிவேல் (27) என்பதும். இவர் தான் மயில்வாகனின் ஆட்டோவை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி வேலை கைது செய்தனர். இவர் பல்வேறு வாகன திருட்டில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.