பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மூதாட்டி தவறவிட்ட ரூ.2½ லட்சம் நகை-வெளிநாட்டு பணம் மீட்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பரிதா பேகம் (வயது 60). இவர் பெங்களூரு செல்வதற்காக குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.
பெங்களூரு செல்லும் லாக்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததும் அனைவரும் தங்களது உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் புறப்பட்டனர். சிறிது தூரம் சென்ற போதுதான் பரிதா பேகம் தன்னுடைய உடைமைகள் இருந்த 3 பைகளை பெரம்பூர் ரெயில் நிலையத்திலேயே மறந்து வைத்துவிட்டு ஏறியது தெரியவந்தது. இதையடுத்து சக பயணிகள் உதவியுடன் பரிதா பேகம் மூர்மார்க்கெட் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே, போலீசார் பெரம்பூர் ரெயில் நிலையம் விரைந்து அங்கு கேட்பாரற்று கிடந்த 3 பைகளையும் மீட்டனர். அதில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 800 மதிப்பிலான 7 பவுன் நகை, ரூ.1,830 மற்றும் ரூ.3 ஆயிரத்து 689 மதிப்பிலான சவுதி அரேபியா ரியால் உள்பட ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 319 மதிப்பிலான பொருட்கள் இருந்தன. இதையடுத்து பரிதா பேகத்தின் சொந்த ஊரில் வசிக்கும் அவரது பேரனை வரவழைத்து உடைமைகளை போலீசார் ஒப்படைத்தனர்.