மனைவியை கொன்று புதைத்த விவசாயி கைது

விஜயாப்புரா அருகே மனைவியை கொன்று புதைத்த விவசாயி கைது செய்யப்பட்டார். காணாமல் போனதாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

Update: 2021-08-29 20:32 GMT
விஜயாப்புரா:

பெற்றோர் வீட்டில் வசித்தார்

  விஜயாப்புரா மாவட்டம் கொல்காரா தாலுகா தடலகி கிராமத்தை சேர்ந்தவர் ராஜய்யா, விவசாயி. இவரது மனைவி திராட்சாயினி (வயது 39). இந்த தம்பதிக்கு 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ராஜய்யாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் மனைவி திராட்சாயினியுடன் சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

  இதன் காரணமாக கணவர் ராஜய்யாவுடன் வாழ பிடிக்காமல் தார்வார் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் திராட்சாயினி வசித்து வந்துள்ளார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்பட்டதால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தார்வாரில் இருந்து விஜயாப்புராவுக்கு திராட்சாயினி வந்திருந்தார்.

கணவர் கைது

  அன்றைய தினம் திராட்சாயினி தார்வாருக்கு பஸ்சில் புறப்பட்டு வருவதாக, அவரது பெற்றோருக்கு ராஜய்யா தகவல் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மறுநாள் வரை தார்வாருக்கு செல்லவில்லை. இதுபற்றி ராஜய்யாவிடம் விசாரித்த போது, தான் பஸ்சில் ஏற்றி விட்டதாகவும், திராட்சாயினி எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை, அவர் காணாமல் போய் இருக்கலாம் என்றும் திராட்சாயினி பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.

  சந்தேகம் அடைந்த பெற்றோர், விஜயாப்புராவுக்கு வந்து தனது மகள் காணாமல் போய் விட்டதாக கூறி கொல்காரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் ராஜய்யாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மனைவியை கொன்று புதைத்து விட்டதாக அவர் கூறினார். இதையடுத்து, ராஜய்யா கைது செய்யப்பட்டார்.

கழுத்தை நெரித்து கொலை

  விசாரணையில், ஆதார் அடையாள அட்டைகளை எடுக்க வந்த திராட்சாயினியிடம் சமாதானமாக பேச வேண்டும் என்று கூறி தோட்டத்திற்கு ராஜய்யா அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜய்யா தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் திராட்சாயினியின் உடலை தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது.

  கைதான ராஜய்யா மீது கொல்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்