ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஒரு வாரத்தில் 15 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஒரு வாரத்தில் 15 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
பூங்காக்கள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்கள், டிரைவர்கள், வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் பூங்காக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.
படகு சவாரி
ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதமான காலநிலையை அனுபவித்தபடி சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் மழையில் நனைந்தபடி மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளில் சவாரி செய்து வருகின்றனர். அதிக மழை பெய்தால் படகு சவாரி நிறுத்தப்பட்டு, மழை குறைந்த பிறகு இயக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.
வருகை அதிகரிப்பு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23-ந் தேதி 1,536 பேர், 24-ந் தேதி 1,077 பேர், 25-ந் தேதி 1,008 பேர், 26-ந் தேதி 1,468 பேர், 27-ந் தேதி 1,830 பேர், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 664 பேர், நேற்று 4 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 15 ஆயிரத்து 083 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
இதேபோன்று ஊட்டி படகு இல்லத்துக்கு வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. வார விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரத்து 626 பேர் வருகை தந்தனர். ஒரு வாரத்தில் 12 ஆயிரத்து 500 பேர் படகு இல்லத்துக்கு வந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.