கேரளாவில் ஊரடங்கு எதிரொலி; தமிழக எல்லையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழக எல்லையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Update: 2021-08-29 16:51 GMT
தேனி:
கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழக எல்லையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. 
கேரளாவில் முழு ஊரடங்கு
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் அந்த மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கேரளாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு மற்றும் இன்று (திங்கட்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
இதையொட்டி தமிழக-கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரும் பாதைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய மலைப்பாதைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
திருப்பி அனுப்பப்பட்டனர்
இந்த சோதனை சாவடிகளில் கடந்த ஒரு மாத காலமாகவே வாகன தணிக்கை நடந்து வருகிறது. கொரோனா பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே வணிகர்கள், சுற்றுலா பயணிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் நேற்று கேரளாவில் முழு ஊரடங்கு என்பதால் தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். இதில், அத்தியாவசிய பொருட்களான பால், இறைச்சி, காய்கறி, பழங்கள் போன்றவை எடுத்துச் சென்ற வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் செல்லவும், தமிழகத்திற்குள் நுழையவும் அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. 
மேலும் தேனி வழியாக கேரளாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சோதனை சாவடியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் செய்திகள்