சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என நாகையில் நடந்த 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-08-29 16:44 GMT
நாகப்பட்டினம்:
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என நாகையில் நடந்த 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நாகை நம்பியார் நகர் மீனவர் கிராமத்தில் நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1983-ம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை ஆகியவற்றை பயன்படுத்துவதை, சுருக்குமடி வலையை பயன்படுத்தாத கிராமங்கள் கூடி தடுப்பது, சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல். எனவே இது கண்டிக்கத்தக்கது.
பேச்சுவார்த்தை
2000-ம் ஆண்டு சுருக்குமடி வலை மற்றும் 21 அம்ச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் மீனவர்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மீன்வள மசோதா 2021 மற்றும் சாகர்மாலா திட்டம் ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனைத்து மீனவ கிராமங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போராட்டம்
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கூறியதாவது:-
சுருக்கு மடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுருக்குமடி வலை உள்ளிட்ட அனைத்து வலைகளும் பயன்படுத்த அரசு அனுமதி தரவேண்டும். அனுமதி தரவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்