வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் திறப்பு
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் திறப்பு
வால்பாறை
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்பேரில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 15 ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
இதன்படி வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மையத்தை வால்பாறை அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி மையம் தொடங்கப்பட்ட முதல் நாளான நேற்று 30 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதில், வெளியூர்களில் இருந்து வந்திருந்த பலரும் தடுப்பூசி போட்டு கொண்டனர். வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 750, கோவேக்சின் தடுப்பூசி 100 டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை மருத்துவர் மகேஷ்ஆனந்தி கூறுகையில், சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி 24 மணி நேர தடுப்பூசி மையம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு எப்போதும் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதுவரை தடுப்பூசி போடாத வால்பாறை தாலுக்கா பகுதி மக்கள் காலதாமதம் செய்யாமல் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.