திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமம் அரக்கோணம் சாலை பகுதியை சேர்ந்தவர் வீரன் (வயது 58). விவசாயி. இவருக்கு உமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீரன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன்் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது வயலில் வேலை செய்ய சென்றார்.மதியம் ஒரு மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
நகை, பணம் திருட்டு
மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து வீரன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சம்ப இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ேபாலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.