சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி பெறுவது தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிட அனுமதி பெற கட்டிட உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடிக்குள் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தலைமை என்ஜினீயரால் அனுமதி அளிக்கப்படுகிறது. 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, கட்டிட அனுமதி பெறுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்படுகிறது. கட்டிட அனுமதிக்கான விண்ணப்பத்தின் மீது அலுவலர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டணம் செலுத்துவதற்கான கேட்பு ரசீதினை விண்ணப்பதாரர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணத் தொகையை செலுத்தியதும் இணையதளத்தில் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக வெளிப்படைத் தன்மையுடன் கட்டிட அனுமதி அளிக்கப்படுகிறது. மாநகராட்சியின் இணையதளத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் உடனடியாக பரிசீலினை செய்து கட்டிட அனுமதி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்க விரும்பினால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445190748 என்ற விழிப்பு அலுவலரின் வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.