அண்ணாசாலை குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபர் கைது
சென்னை அண்ணாசாலை எல்லீஸ் சாலை பங்காரு நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 21-ந்தேதி இரவு தனது வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கியபோது அவரது வீட்டில் 18 பவுன் தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளை போனது.
இதுகுறித்து அண்ணாசாலை போலீஸ்நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன்பேரில் அண்ணாசாலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், மணிகண்டன் வீட்டில் கைவரிசை காட்டியது பழைய குற்றவாளியான அண்ணாசாலை குடிசை பகுதி சுப்புராயன் முதலி தெருவை சேர்ந்த லோகேஷ் (வயது20) என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் லோகேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டு நகைகள், வெள்ளி பொருட்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. லோகேஷ் மீது வீடு புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள் திருட்டு உள்பட 7 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் லோகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.