மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் சுற்றுலா தலமாக மீண்டும் மாறிய பண்ணவாடி பரிசல் துறை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடி பரிசல் துறை மீண்டும் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
கொளத்தூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடி பரிசல் துறை மீண்டும் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
கிராமங்கள்
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் பண்ணவாடி, காவேரிபுரம், சேத்துக்குளி, புதுவேலமங்கலம், சாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இருந்தன. அணையின் கட்டுமான பணிகள் தொடங்கும் போது இந்த கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
அணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டதால், கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் அங்கிருந்த நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் மற்றும் வழிபாட்டு தலங்களும் தண்ணீரில் மூழ்கின.
நீர்மட்டம் குறைந்தது
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு கீழ் குறையும்போது பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ கோபுரமும், அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது மற்றொரு புராதன சின்னமான நந்தி சிலையும் வெளியே தெரிவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
மீண்டும் சுற்றுலா தலமாக மாறியது
இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை தற்போது கழுத்துவரை வெளியே தெரிகிறது. இந்த நந்தி சிலையை பார்த்து ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் படகில் சென்று நந்தி சிலையை பார்த்து செல்வதால் பண்ணவாடி பரிசல்துறை மீண்டும் சுற்றுலா தலமாக மாறி உள்ளது.