மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல், பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தது
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பெங்களூரு: ஐதராபாத் கூபாபேட்டை பகுதியை சேர்ந்தவர் 19 வயது வாலிபர். இவர் தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக கலபுரகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதனால் அவருடைய குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு தனியார் மருத்துவமனையில் இருந்து கலபுரகி தனியார் மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி, கலபுரகியில் இருந்து கல்லீரலை பெங்களூருவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கலபுரகியில் இருந்து பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக கொண்டு சென்றால் தாமதம் ஆகும் என்பதால், கலபுரகி அருகே உள்ள ஐதராபாத்துக்கு சாலை மார்க்கமாக கல்லீரல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட கல்லீரல், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.