வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்-கே.எஸ்.அழகிரி வரவேற்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2021-08-28 20:53 GMT
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- 
தேசியத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முன்னாள் எம்.பி. வசந்தகுமார். அவரது நினைவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போற்றுகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தி.மு.க. 100 நாள் ஆட்சியில் எதையும் செய்யவில்லை என அ.தி.மு.க.வினர் சொல்வது தவறு. தற்போதைய பொருளாதார சூழ்நிலையை தமிழக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி உள்ளார். நிதி நிலை அறிக்கையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நிதி அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

7 ஆண்டுகளாக பெட்ரோல் வரியை பிரதமர் மோடியால் குறைக்க முடியாத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை குறைத்துள்ளார். கோடநாடு விவகாரத்தை விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கோடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் பணகுடி நான்கு வழிச்சாலை சந்திப்பில் காமராஜர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜி.கே.மூப்பனார் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டு உள்ள இடத்தை கே.எஸ்.அழகிரி பார்வையிட்டார்.
 
பின்னர் அவர் கூறுகையில், ‘10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள இந்த முப்பெரும் தலைவர்கள் சிலை விரைவில் திறக்கப்படும். தமிழக சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புரட்சிகரமானது. இதற்காக தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். 

நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்