போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை செயல்விளக்க பயிற்சி

போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல்விளக்க பயிற்சி பழனி வரதமாநதி அணையில் நடந்தது.

Update: 2021-08-28 20:25 GMT
பழனி: 

திண்டுக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு சார்பில், போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை குறித்த செயல்விளக்க பயிற்சி பழனி வரதமாநதி அணையில் நேற்று நடந்தது. இதற்கு சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் தலைமை தாங்கினார். 

பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன், கமாண்டோ பயிற்சி பள்ளி போலீசார் சிவக்குமார், கதிரவன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில் மழை, வெள்ளம், புயல், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் பேரிடர் காலத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, நீரில் தத்தளிப்பவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து வரதமாநதி அணையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேக ரப்பர் படகில் பாதுகாப்பு உபகரணங்களுடன் போலீசார் அணை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.


இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் கூறுகையில், அடுத்த மாதம்(செப்டம்பர்) இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. எனவே தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குறித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தீயணைப்பு துறையினருடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த பயிற்சியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 60 போலீசார் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்