நெல்லையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோ, வீடியோ வெளியிட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை வேதக்கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் அருள் ஜெயராஜ் என்ற கோழி அருள் (வயது 42). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர் இரு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள் ஜெயராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை சூப்பிரண்டு ஜெபராஜ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், அருள் ஜெயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து தாலுகா போலீசார், அருள் ஜெயராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை கோவை மத்திய சிறையில் நேற்று வழங்கினர்.
தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த முருகாண்டி என்பவரின் மகன் கண்ணன் என்ற கந்தசாமி என்ற கண்ணபிரான் (42). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் இரு சமுதாயத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் பேசி வீடியோ பதிவு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இவரை தாழையூத்து போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரைப்படி கலெக்டர் விஷ்ணு, கண்ணபிரானை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தாழையூத்து போலீசார் நேற்று கடலூர் மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.