சொத்து தகராறில் விவசாயி கொலை: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட மேலும் 2 பேர் கைது
சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரையூர்:
விவசாயி கொலை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டி இடையன்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா மகன் நடேசன் (வயது 50). விவசாயி. இவரின் தந்தை சின்னையாவின் அண்ணன் முத்தாண்டி மனைவி அடக்கி இடையன்பாறை கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடேசன், அடக்கியை பராமரித்து வந்துள்ளார். அடக்கி வசித்து வந்த வீட்டின் அருகே நடேசன் ஆட்டு கூடத்திற்கு தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை கொன்னையம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி மகன் முருகன் (28), சுப்பிரமணியன் (27) ஆகிய இருவரும் இடையான்பாறைக்கு வந்து எனது பெரியம்மா அடக்கியின் சொத்துக்கள் எங்களுக்கு தான் என்று தகர கொட்டகையை பிரித்து எரிந்துள்ளார்.
2 பேர் கைது
இதையடுத்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என நடேசன் கேட்டுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த இரும்பு கடப்பாைரயில் இருவரும் நடேசன் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், காரையூர் போலீசார் முருகன், சுப்பிரமணியன், சுந்தரம் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் நடேசன் மனைவி பஞ்சவர்ணம் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரில் 3 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். மீதி உள்ள 5 பேரை கைது செய்யவேண்டும் என்று சாலை மறியல் செய்தனர்.
இந்நிலையில் இதில் சம்பத்தப்பட்ட அரசமலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இடையன்பாறையை சேர்ந்த ராமச்சந்திரன், சாமிராஜ் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.