ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனைவியிடம் 16 ஆயிரம் மோசடி
ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனைவியிடம் 16 ஆயிரம் மோசடி
கோவை
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மனைவியிடம் ரூ.16 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்
கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு ஸ்ரீபதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர், தற்போது வீரகேரளம் மத்திய கரும்பு ஆராய்ச்சி மையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். இவருடைய மனைவி வசந்தி (வயது 54).
இவர், தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
அவர், அங்கிருந்த ஒருவரிடம், தனது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.1000 பணம் எடுத்து தருமாறு வசந்தி கூறியுள்ளார்.
அப்போது ஏ.டி.எம். கார்டிற்கு உரிய ரகசிய எண்ணையும் கூறியுள்ளார்.
உடனே அந்த நபர் வசந்தி கொடுத்த ஏ.டி.எம்.கார்டில் இருந்து ரூ.1000 எடுத்து கொடுத்துள்ளார்.
ரூ.16 ஆயிரம் மோசடி
பின்னர் அந்த நபர், வசந்தியின் ஏ.டி.எம்.மிற்கு பதிலாக வேறொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்டு வசந்தி சென்று விட்டார்.
அதன்பிறகு வசந்தியின் ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி ரகசிய எண்ணை அழுத்தி ரூ.16 ஆயிரத்தை எடுத்தார்.
இதற்கான குறுஞ்செய்தி வசந்தியின் கணவரின் செல்போன் எண்ணிற்கு சென்றது. மாலையில் வீடு திரும்பிய அவர், ஏ.டி.எம்.மில் ரூ.16 ஆயிரத்தை எதற்காக எடுத்தாய் என்று கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வசந்தி, நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.