கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு ‘சீல்’
திருமருகல் அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய ரூ.60 லட்சம் மதிப்பிலான வீட்டை பூட்டி அறநிலையத்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய ரூ.60 லட்சம் மதிப்பிலான வீட்டை பூட்டி அறநிலையத்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
கோவில் இடம் ஆக்கிரமிப்பு
நாகை மாவட்டம் திருமருகல் அருகே பாக்கம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 2 ஆயிரத்து 300 சதுர அடியில் வீடு கட்டியிருந்ததாகவும், இதற்கான வாடகையும் கொடுக்காமல் இருந்து வந்தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்யும்படி கடந்த 2009-ம் ஆண்டு நாகை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அறநிலையத்துறையினர் இடத்தை காலி செய்யும்படி செல்வத்திடம் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர் இடத்தை காலி செய்யாமல் இருந்து வந்தார்.
ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு ‘சீல்’
இந்த நிலையில் நாகை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து உத்தரவின் பேரிலும், உதவி ஆணையர் ராணி அறிவுரையின்படியும் கோர்ட்டு அமீனா மனோகரன், கோவில் நிர்வாக அதிகாரி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் தலைமையில் போலீசார் நேற்று அங்கு சென்றனர்.
பின்னர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.