கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் மயிலாடுதுறை- திருச்சி இடையே அனைத்து ரெயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும் திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு

கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் மயிலாடுதுறை- திருச்சி இடையே அனைத்து ரெயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-08-28 16:06 GMT
கும்பகோணம்:-

கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் மயிலாடுதுறை- திருச்சி இடையே அனைத்து ரெயில்களையும் உடனடியாக இயக்க வேண்டும் என திருச்சி கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. 

ரெயில் நிலையத்தில் ஆய்வு

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் நேற்று மதியம் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் பயணிகள் தங்குமிடம், சரக்கு இறக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
நான் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளராக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளேன். முதல் கட்டமாக திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியமான ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். முக்கியமான ரெயில் பாதைகளில் உள்ள இடர்பாடுகள், ரெயில் நிலையங்களில் உள்ள தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

படிப்படியாக இயக்கப்படும்

கொரோனா பரவல் காரணமாக ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ஏற்கனவே இயங்கி வந்த ரெயில்களை மீண்டும் படிப்படியாக இயக்கப்படும். கொரோனா பரவல் நிலையை பொறுத்து வருங்காலங்களில் ரெயில்களின் இயக்கம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை முதல் விழுப்புரம் வரை மயிலாடுதுறை வழியாக இருவழிப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னர் இரு வழிப்பாதை திட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனு

ஆய்வின்போது திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி, இணைச்செயலாளர்கள் சரவணன், நடராஜ்குமார் ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 
கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்திருப்பதால் முன்பு மயிலாடுதுறை-திருச்சி இடையே இயக்கப்பட்ட அனைத்து சாதாரண மற்றும் விரைவு ரெயில்களை மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும். திருச்சி ரெயில்வே கோட்டத்தில், குறிப்பாக மெயின் லயன் பாதையில் அதிக அளவில் இயக்கப்படும் பாசஞ்சர் உள்ளிட்ட ரெயில்களை மின்தொடர் வண்டிகளாக மாற்றவும், கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் மின்தொடர் வண்டிகளை பராமரிக்க பணிமனை அமைக்கவும் தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் 2 மற்றும் 3-ம் நடைமேடை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 
ஆய்வின்போது கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஹரிகுமார், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்