தஞ்சை விடுதியில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
தஞ்சை விடுதியில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:-
தஞ்சை விடுதியில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கும் விடுதியில் வாலிபர் பிணம்
கோவை மேட்டுப்பாளையம் சின்னம்மா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் லென்னட் பிராங்க்ளின்(வயது 39). இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
கடந்த 22-ந் தேதி முதல் தங்கி இருந்த அவர் நேற்று காலை அறையில் வாயில் ரத்தம் வழிந்த நிலையிலும், அறையில் ரத்தம் படிந்த நிலையிலும் பிணமாக கிடந்தார். அவரது இடது கண்ணிற்கு கீழே வீக்கமாக இருந்தது. உடல் அருகே உடைந்த நிலையில் ஹெல்மெட்டும் கிடந்தது.
அடித்துக்கொலை?
எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் பிணமாக கிடந்த லென்னட் பிராங்க்ளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபசார கும்பலுடன் தொடர்பா?
லென்னட் பிராங்க்ளின், தஞ்சையை சேர்ந்த விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவருக்கு சொந்தமான ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். எனவே லென்னட் பிராங்க்ளினுக்கும், விபசார கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் பிராங்க்ளின் தங்கி இருந்த அறைக்கு எதிர் அறையில் சில பெண்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே பிராங்க்ளினுக்கும், விபசார கும்பலை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.