கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள்

Update: 2021-08-28 14:48 GMT
போத்தனூர்

கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று வாளையாறில் ஆய்வு செய்த பிறகு கலெக்டர் சமீரன் கூறினார்.

கலெக்டர் ஆய்வு

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தின் எல்லையையொட்டி கோவை உள்ளது. எனவே கேரளாவில் இருந்து கோவைக்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

 மேலும் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 13 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக- கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடி  அருகே கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம், தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு ஆய்வு செய்தார். 

மேலும் சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கலெக்டர் சமீரன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது

திருப்பி அனுப்பும் நிலை

கோவை மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள மாநிலத்தின் பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கோவை மாவட்ட எல்லையோரங்களில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக வாளையாறு சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தேன். கேரளாவில் இருந்து வருபவர்கள் போதுமான ஆவணங்கள் வைத்திருக்கின்றனர். 

72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் திருப்பி அனுப்பும் சூழல் உருவாகி உள்ளது.

தடுப்பூசி போட அறிவுரை

கேரள மாநிலத்தில் நாள்தோறும் சென்று வருவதற்கான சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

1.8 முதல் 1.9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்று அதி கரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.

கொரோனா தொடர்பாக பாலக்காடு, மலப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம், கேரளாவில் இருந்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு 2 டோஸ்கள் தடுப்பூசி போட்டு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மாணவர்கள் முதல் டோஸ் தடுப்பூசி கேரளாவில் போட்டிருந்தால்2-வது தவணை இங்கு கல்லூரிகள் போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் மொத்தம் 22.20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இதில் 71 சதவீதம் அரசு சார்பாக போடப்பட்டு உள்ளது.

 தொழிற்சாலை, நிறுவனங்கள் சார்பில் 2.16 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு உள்ளது. 18 ஆயிரம் தடுப்பூசிகள் சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் இலவசமாக போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 38 லட்சம் பேர் உள்ளன. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 27 லட்சத்து 50 ஆயிரம் பேர். முதல் தவணை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ளது. 2-ம் தவணை ஊசி போடுவார்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி உள்ளது. 

கேரளாவிற்கு நாள்தோறும் சென்று வருவது என்பது ஆபத்தானது. ஆனாலும் தொழில் காரணங்களால் சென்று வருவது தவிர்க்க முடியாதது. எனவே முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்