சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டின் மொட்டை மாடியில் மர்ம சூட்கேஸ்-வெடிகுண்டு பீதியால் பரபரப்பு

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டின் மொட்டை மாடியில் மர்ம சூட்கேஸ் கிடந்தது. வெடிகுண்டு பீதியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-27 22:44 GMT
சேலம்:
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி வீட்டின் மொட்டை மாடியில் மர்ம சூட்கேஸ் கிடந்தது. வெடிகுண்டு பீதியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. நிர்வாகி
சேலம் அரிசிபாளையம் தம்மண்ணன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 57). இவர் அ.தி.மு.க.வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் அவர் சூரமங்கலம் சுப்பிரமணியநகர் கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக சுந்தரபாண்டியன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த சூட்கேஸ் குறித்து கேட்டார். இதற்கு அவர்கள் அது நம்முடையது கிடையாது என்று தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதனிடையே மர்ம சூட்கேசில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் அங்கு பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொம்மைகள்
தொடர்ந்து சுந்தரபாண்டியன் வீட்டுக்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தலைமையில் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து ஒரு நீண்ட குச்சியில் சூட்கேசை சொருகி மீட்டனர். அங்கு ஏதேனும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சூட்கேசை பள்ளப்பட்டி ஏரி பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு சென்று திறந்தனர்.
அப்போது அதற்குள் விளையாட்டு பொம்மைகள், கார் உள்ளிட்டவை இருந்தது. இதையடுத்து வெடிகுண்டு பீதி அடங்கியது. மேலும் சுந்தரபாண்டியனின் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சூட்கேசை வைத்துவிட்டு சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்