ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி; புதிதாக 122 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானாா்கள். புதிதாக 122 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-27 21:20 GMT
ஈரோடு
சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 915 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 152 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 95 ஆயிரத்து 746 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 1,521 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 29-ந்தேதி முதியவர் இறந்தார்.
மேலும் பவானி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த, 73 வயது முதியவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்