நகை திருட்டு வழக்கில் பஞ்சாயத்து துணைத்தலைவர் மகன் கைது

நகை திருட்டு வழக்கில் பஞ்சாயத்து துணைத்தலைவர் மகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது

Update: 2021-08-27 18:15 GMT
எஸ்.புதூர்
நகை திருட்டு வழக்கில் பஞ்சாயத்து துணைத்தலைவர் மகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டது.
போலீசார் ரோந்து
எஸ்.புதூர் அருகே குளத்துப்பட்டி பகுதியில் அதிகாலையில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஒரு வாலிபர் படுத்து கிடந்தார். அந்த நபரை எழுப்பி விசாரிக்கும்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். 
விசாரணையில், அவர் எஸ்.புதூர் ஒன்றியம் புல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வலசைபட்டி ஊராட்சி துணைத்தலைவர் ரமேஷ் மகன் சந்தோஷ்(வயது 19) என்பதும், மாயாண்டிபட்டி, புல்லாம்பட்டி, எஸ்.புதூர், கிழவயல் மற்றும் பூலாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சந்தோசுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. 
20 பவுன் நகை மீட்பு
மேலும் இவருடன் குளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா, திருச்சி மாவட்டம் வெள்ளியங்குடிபட்டியை சேர்ந்த சுதாகர் ஆகியோரும் கூட்டாக சேர்ந்து நகைகளை திருடியதும் தெரிந்தது. பாரதிராஜா, சுதாகர் ஆகியோர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
திருடப்பட்ட 20 பவுன் நகைகளை உருக்கி கட்டியாக  அவர் வைத்திருந்தார். சந்தோஷிடம் இருந்து அதனை போலீசார் மீட்டனர். இதுகுறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்பு பரமக்குடி ஜெயலில் அடைத்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள பாரதிராஜா மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்