ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்த வாய்ப்பு. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

Update: 2021-08-27 17:52 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடக்க வாய்ப்புள்ளதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புகுழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் தொடர்பு பணி அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால், தேர்தலில் அதிகம்பேர் போட்டியிடுவார்கள். இதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இதனை சரி செய்து சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2,220 கிராம வார்டு உறுப்பினர்கள், 288 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 127 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான நேரடித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

இத்தேர்தல் அனேகமாக 2 கட்டமாக நடத்த வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்காக மாவட்டத்தில் 1,410 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும். நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் இடம் பெறும். தேர்தலுக்குப் பின்னர் மறைமுக தேர்தல் முறையில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள், ஒன்றியகுழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு, அடிப்படை வசதிகளான சாய்தளம் அமைத்தல், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

 வாக்குப்பெட்டிகள் இருப்பு, தேவை, வாக்குச்சீட்டுகள் தேவையான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை உறுதி செய்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

பதற்றமான வாக்குச்சாவடிகள்

மாவட்டத்திலுள்ள 452 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள், மத்திய அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, சிவராசு, போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், பூரணி, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் லதா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்