கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு: சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தொிவித்து சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனா்.

Update: 2021-08-27 17:28 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் சபாநாயகர் தெரு சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில்  உள்ளது. இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கடந்த 17-ந்தேதி பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் கோவிலை கட்டி தரக்கோரியும் சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தை நேற்று பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் சப்-கலெக்டர் மதுபாலனை சந்தித்து கோவிலை மீண்டும் கட்டி தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

முன்னதாக அங்கு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்