கூடலூரில் தடுப்பூசி போட முண்டியடித்த தோட்ட தொழிலாளர்கள்
கூடலூரில் சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி போட முண்டியடித்த தோட்ட தொழிலாளர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
கூடலூர்:
கூடலூர் பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பலரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழக-கேரள எல்லையான குமுளி மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் தற்போது அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால் கேரளாவுக்கு செல்ல 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் சென்ற தோட்ட தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கசநாக்கமுத்தன்பட்டி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கூடலூர் பூக்கடை வீதி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி போடுவதற்காக தோட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு ஒருவரையொருவர் முண்டியடித்தபடி வரிசையில் நின்றனர்.
இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அவ்வப்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் தோட்ட தொழிலாளர்கள் கூட்ட நெரிசலுடன் நின்றனர். எனவே சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் தடுப்பூசி முகாம்கள் நடைபெற மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.